புதுடெல்லி: காசியில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன், அலகாபாத் மற்றும் அயோத்தியா பகுதிகளையும் அவர்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த பலர் காசி தமிழ்ச் சங்கமத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இதில், பலர் சங்கமத்தின் காட்சிகளுடன் தம் வீடியோ பதிவுகளை எடுத்தும் பிரதமருக்கு அனுப்பியிருந்தனர்.
அவை அனைத்தையும் பொறுமையாகப் படித்தும், பார்த்தும் பிரதமர் மோடி வியந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவற்றை தமக்கு அனுப்பிய அனைவருக்கும் பதில் கடிதங்களை பிரதமர் மோடி அனுப்பி வருகிறார். தமிழில் அச்சடிக்கப்பட்ட அந்த கடிதங்களில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். இந்த கடிதங்களை பெற்றவர்கள் அவற்றை சமூகவலைதளங்களிலும் பகிரத் துவங்கி உள்ளனர்.
ஒரு கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்கள் பங்கேற்றது குறித்து உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க காசியில் தமிழர்களின் வளமையானக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கொண்டாட்டத்தை காணும் இனிமையான அனுபவம், கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதைப் போன்றது.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பது ஒரு சொற்றொடர் மட்டுமல்ல. பன்முகத்தன்மையை கொண்டாடும் இந்தியா போன்ற நாட்டிற்கு தனித்துவமான ஒரு வாழ்க்கை முறையாகும். சங்க இலக்கியத்தின் தொன்மையானக் காலகட்டத்திலிருந்து நவீன கால காசி தமிழ்ச் சங்கமம் வரை, அத்தகைய உடைக்க முடியாத ஒற்றுமை இழைகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். காசி யும், தமிழகமும் ஒன்றுக்கொன்று பூகோள ரீதியாக தொலைவில் இருக்கலாம். ஆனால், அவை கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியாக உறுதியாக, ஒற்றுமையாகப் பிணைந்துள்ளன.
உங்களின் வாழ்த்து செய்தி, காசி தமிழ் சங்கமத்தின் மீதான உங்கள் அன்பையும், பாசத்தையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த அன்பு, தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்த, அயராது பாடுபட என்னுள் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பக்கத் கடித உறையின் முன்புறத்தில் ஐந்து உயிர் மூச்சானக் கொள்கைகள் உன்னதமானக் கொள்கைக்காக என்ற தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதில், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியஐந்து கொள்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் கீழேயும் பிரதமர் தனது ஒரு கையெப்பத்தை இட்டுள்ளார். இந்த பதில் கடிதத்தை கண்ணாடியால் படமாக்கி சுவர்களில் தொங்கவிடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் விருந்து: ‘இந்து தமிழ் திசையிடம்’ மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த 2,500 பேர்களையும் ஒருநாள் அழைத்து கவுரவிக்க உள்ளோம். மத்திய அமைச்சகங்கள் சார்பிலான இந்த விழா ஒருநாள் விருந்துடன் ராமேஸ்வரத்தில் சிறப்பு பூசையுடன் நடத்த திட்டமிடப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் பிரதமர் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன’’ எனத் தெரிவித்தார்.