டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதி சிந்தி பஸ்தியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பெற்றோருடன் ஆனந்த் (7), ஆதித்யா (5) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழுவும், சிறுவனின் குடும்பத்தினரும் அவரைத் தேடத் தொடங்கினர். அவர்கள் வசித்து வந்த குடிசைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்டில் இரண்டு மணி நேரம் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தனிமையான இடத்தில் ஒரு சுவருக்கு அருகில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்தன. இந்தக் காயம் விலங்கு கடித்ததால் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில், வனப்பகுதிக்குள் தெருநாய்கள் நடமாடுவதும், அடிக்கடி ஆடு, பன்றிகளை தாக்குவதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று, ஆனந்தின் தம்பி ஆதித்யா தன் உறவினர் சாந்தனுடன் (24) அவசரத் தேவைக்காக அதே காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். சந்தன் சிறுவனை சிறிது நேரம் விட்டுவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆதித்யாவை தெருநாய்கள் சூழ்ந்து தாக்கியிருக்கிறது. உடனே சாந்தனு சிறுவனை மீட்டு வந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர்களின் உறவினர் ஒருவர்,”ஆனந்தின் இறுதிச் சடங்குகளில் குடும்பத்தினர் பிஸியாக இருந்த நேரத்தில் ஆதித்யா தாக்கப்பட்டிருக்கிறார். தெருநாய்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அது தொடர்பான பிரச்னைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை” என்று கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு மகன்களையும் இழந்து வாடும் அவர்களின் பெற்றோர்களின் கதறல் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.