கோவிட் தொற்றுடன் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் தேதி கோவிட் தொற்றால் இணைநோய்களுடன் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோவிட் தொற்றிற்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
திருச்சி மலைக்கோட்டை சேர்ந்த 27 வயது இளைஞர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆம் தேதி நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் திரும்பியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த இளைஞருக்கு 10 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.
மார்ச் 10 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மார்ச் 11 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிட் தொற்றால் இவர் உயிரிழந்துள்ள நிலையில், எந்த வகை வைரஸ் பாதிப்பு என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரபணு வரிசை பகுப்பாய்வு முடிந்த பின் எந்த வகை கோவிட் வைரஸ் பாதிப்பு என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
என்ன சொல்கிறார் அமைச்சர்?
சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழ்நாட்டில் கடந்த 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். பெங்களூருவில் தங்கி பணிபுரியும் திருச்சி இளைஞருக்கு கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருடைய மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மையத்தில் ஆய்வில் உள்ளது.
எந்த வகை கோவிட் வைரஸ் அவருக்கு இருந்தது என்பது ஆய்வு முடிவில் தெரிய வரும். அதேவேளையில் அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.
எனவே பொதுமக்கள் கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுதுமாறும், காய்ச்சல், கோவிட் பரவல் குறித்து அச்சம் கொள்ளாமல் பெற்றோர்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் பேசியதன் முழுவிவரம் அறிய இங்க வீடியோவை காணவும்..
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM