அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது/
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் காரணமாக இந்த வழக்கில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று வாதம் வைக்கப்பட்டது.
அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விளக்கம் அளிக்க அவர் கால அவகாசம் வேண்டும் என்று, கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாகிவிட்டதா? என்பது குறித்த விளக்கத்தை பதில் மனுவாக தக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.