பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு-மைசூரு இடையிலான அதிவிரைவு சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அதனை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்றிய காங்கிரஸ் அரசின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கியது. அப்போது ரூ.6,420 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட சாலை தற்போது பாஜக ஆட்சியில் 10,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக காங்கிரஸ் சாடியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா சென்ற பிரதமர் மோடிக்கு மாந்தியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரு – மைசூரு 10 வழி அதிவேக சாலையை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த சாலையால் மைசூருவில் இருந்து பெங்களூருவிற்கு வெறும் 75 நிமிடங்களில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 118 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலையில் 21 கிமீ அளவிற்கு பல்வேறு இடங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புள்ளி விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்றும் 2 மாதங்களே உள்ள நிலையில், பணிகள் முழுமையாக முடிவடையாத சாலையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜும் இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி பணிகள் முழுமையாக முடிவடையாத இடங்கள் குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.