பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கிராமங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகளை விரட்டுவது எப்படி? என விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும், நான்காம் ஆண்டு இளங்கலை மாணவிகள், ஆழியார் அருகே தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், நெல்லித்துறை மன்னம் கிராமத்தில் கிராம சுயம திப்பீடு நடத்தினர். அப்போது, விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் விரட்டியடிப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.
வேளாண்மை மாணவிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. அவை விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
எனவே, காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளை பாதுகாப்பாக விரட்டுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லைகளை போக்க, காட்டுப்பன்றி விரட்டியை பெற, வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.