உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழா உலகளவில் கவனம் பெற்று வருகிறது.
இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் பராமரிக்க்கப்படும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளையும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகிய இருவரும் வளர்த்த முறை, அவர்களுக்குள் ஏற்பட்ட பாச பிணைப்பு குறித்து இந்த ஆவணப் படம் இயக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த கார்த்திகி, கன்சால்வஸ் என்ற பெண் இயக்குனர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.
மேலும் சிறந்த பாடலுக்கான விருதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் வென்றுள்ளது.
இந்தியாவுக்கு தங்கள் படைப்புகள் மூலம் பெருமை தேடித் தந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்
தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ள வாழ்த்து செய்தியில், “ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், “முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்துக்கள். முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது” என்று கூறியுள்ளார்.