புதுடெல்லி: மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 13) நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன.
இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தில் எதிர்கட்சிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவல் அறையில், எதிர்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதற்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இதில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் தல், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), மதிமுக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
இந்த கூட்டத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது, அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோருவது என முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், அமலாக்கத்துறை, சிபிஐ சோதனைகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் எதிர்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள். அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் இணைந்து ஒரு வியூகம் உருவாக்கியுள்ளோம்” என்றார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்று (மார்ச் 12) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை சந்தித்தார். அப்போது அவர், பொறுப்புள்ள அரசாங்கத்தை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்,1ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் பிப் 10ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது கட்ட கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.