அமெர்க்காவைச் சேர்ந்த 81 வயது ஜெர்ரி ஜோரெட் முன்னாள் நாசா ஊழியர் மற்றும் கணிதவியலாளர். இவர், கலிஃபோர்னியா பிக் பைனில் உள்ள தன்னுடைய மலை வீட்டில் இருந்து, நெவாடா கார்ட்னெர்வில்லேவில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரின் வீட்டிற்குச் செல்ல, பிப்ரவரி 24 அன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பகுதிக்குச் செல்ல மூன்று மணிநேரமாகும் என்ற நிலையில், 30 நிமிடங்களிலேயே காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் தாறுமாறாக ஓடி பனியில் பாதியளவு புதைந்துள்ளது. காரில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சிக்கிக் கொண்டவர், காரிலேயே ஒருவாரம் தங்கியுள்ளார்.
தன்னை சூடாக வைத்துக் கொள்ள காரில் இருந்த எரிவாயு மற்றும் பேட்டரியை பயன்படுத்தி, காரை அவ்வப்போது ஆன் செய்திருக்கிறார். பயணத்தின் போது தன்னுடன் கொண்டு சென்ற இனிப்புகள், ரஸ்க் உண்டு வாழ்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தண்ணீருக்காக காரின் ஜன்னலைச் சற்று கீழே இறக்கி பனியை உண்டு ஒரு வாரத்தைக் கழித்திருக்கிறார்.
நான்கு நாள்களாக ஜெர்ரியை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். கடுமையான காலநிலை காரணமாக ஆறு நாள்களுக்குப் பின்னரே வான்வழி தேடுதல் மூலமாக, மீட்புப்பணி வீரர்களால் அவரை மீட்க முடிந்தது. அவர் மேற்படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவாக சமூக வலைத்தளத்தில் அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
ஒருவாரமாகப் பனியில் சிக்கிக்கொண்ட முதியவர் இனிப்புகள் மற்றும் பனியை உண்டு வாழ்ந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.