கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வருபவர் சேலத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்ப வரவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மாணவி சாத்தூர் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஞானப்பிரகாசம்(27) என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது.
மேலும் மாணவியை காதலிப்பதாக கூறி ஞானப்பிரகாசம் மாணவியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியும், ஞானபிரகாசமும் ராமேஸ்வரத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திச் சென்ற ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.