டெல்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த எந்த குழுவையும் ஒன்றிய அரசு அமைக்கவில்லை என மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தன. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணை ஆணையத்தை அமைந்துள்ளதா? என எழுத்துபூர்வமாக மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கத் சவுத்ரி, அப்படி எந்த ஒரு விசாரணை ஆணையமும் ஒன்றிய அரசால் அமைக்கப்படவில்லை என எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இதேபோல் அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிர்மலா எழுத்துபூர்வமான பதில் அளித்தார்.