கர்நாடகா மாநிலத்தில், விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படியான நிலையில், கடந்த மூன்று நாட்களாக, மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கர்நாடகத்தில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கள நிலவரத்தை ஆய்வு செய்ய, சுற்றுப்பயணம் வந்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள், பெங்களூரு மற்றும் இதர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ‘‘கர்நாடகா சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் மே, 24-ம் தேதி முடிவடைவதால், அதற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயம். விரைவில் தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்படும். கர்நாடகத்தில் வரும் தேர்தலில் முதல் முறையாக, VFH – Vote from Home என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 80 வயதைக்கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 12டி என்ற படிவத்தை பூர்த்தி செய்து வீட்டிலிருந்தே ஓட்டுப்போடலாம்,’’ எனத்தெரிவித்தார்.
திட்டத்துக்கு எதிர்ப்பு!
இது குறித்து பேசிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர்கள், ‘VFH – Vote from Home திட்டம் குறித்து கருத்துக்கேட்பு நடத்தாமல், நேரடியாக அமல்படுத்தப்படுமென அறிவிக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதேனும் ஒரு தொகுதியில் Trial பார்த்து, வல்லுனர்கள் குழு வைத்து ஆலோசித்து அதன்பின் தான், செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தால், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் ஓட்டுக்களை குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தங்களுக்கு சாதகமான ஓட்டாக மாற்ற, அதிக வாய்ப்புள்ளது,’’ என்றனர்.