கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற பத்து வயது சிறுவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய வீட்டில் சானிட்டரி பாட்டில் கையில் வைத்திருந்தபோது தவறி நெருப்பில் விழுந்ததில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் உயிருக்கு போராடி வந்த நிலையில் தன் மகனை கருணை கொலை செய்திட வேண்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவனின் தாயார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்காணிப்பில் அந்த சிறுவன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
சூரியகுமாருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் ஆறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது குணப்படுத்தப்பட்டுள்ளார். சிறுவன் சூரியகுமார் நல்ல முறையில் குணமடைந்ததை தொடர்ந்து சென்னை அரசினர் தோட்டம் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை எடுத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வரவழைத்து பாராட்டி சிறப்பித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீக்காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு,ரத்த கொதிப்பு போன்ற பல பாதிப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உடனடியாக சிறுவன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கை கால்கள் அசைக்க முடியாத நிலைமையில் இருந்த சிறுவனின் உடல் நிலையை சரி செய்ய ஆறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவ சிகிச்சைகளுக்கு மணிமகுடமாய் இந்த சிறுவனை காப்பாற்றிய சிகிச்சை அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தமிழ் நாட்டில் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 263 பேர் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
சமுதாய மற்றும் சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக் கவசம், தனிமனித இடைவெளி அவசியம் என்றும் பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போது அவசியம் இல்லை என்றார்.