எடப்பாடி மீதே வழக்கா.. வன்முறை வெறியாட்டம் நடக்கணுமா.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளார் கந்த சனிக்கிழமை, சிவகங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் தனது பேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை வைத்துக் கொண்டு நேரலையில் வந்தார்.

அப்போது, துரோகத்தின் அடையாளம் எடப்பாடி. சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என்றெல்லாம் கூறி அதிர்ச்சியூட்டினார். இதைக் கண்ட எடப்பாடியின் பாதுகாவலர் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து கொண்டார். அதேபோல் விமானநிலையத்தை விட்டு வெளியே வந்த ராஜேஸ்வரனை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் அவரது பாதுகாவலர், முன்னாள் அமைச்சர்கள் சிலர் என்னை தாக்கினர். எனது செல்போனையும் பறித்துக் கொண்டனர் என ராஜேஸ்வரன் புகார் மனுவை அளித்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில், 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது தமிழக காவல்துறைக்கு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மீது வழக்கு போட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் வன்முறை ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். வழக்கை நாங்கள் சட்டரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருந்தாலும், பொய் வழக்கு என்பதால் உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட கூடாது, நடுநிலையாக காவல்துறை செயல்பட வேண்டும். பொய் வழக்கை பதிவு செய்து அதிமுகவை முடக்கி விடலாம் என்று நினைப்பது தவறு. மாற்றுக் கட்சியை சேர்ந்த ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட போதும், அவர் எதுவும் செய்யாமல் இருந்தார். சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமே அவருடைய நிகழ்வாக இருந்தது.

இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது என்பது கண்டனத்துக்குரியது. காவல்துறை தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பொய் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் மாவட்ட முழுவதும் போராட்டங்கள் விரிவு படுத்தப்படும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.