அகமதாபாத்,
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து மொத்தம் 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் விராட் கோலி 186 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 91 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்தது. இதையடுத்து 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் தொடர்ந்து பேட்டிங் ஆடினர்.
நேற்று தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குன்னெமன் 6 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் மார்னஸ் லபுஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுமையாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து லபுஸ்சாக்னேவுடன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த இணை மிகவும் பொறுமையாக ஆடினர். ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. ஆட்டம் முடிய சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த போது இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.