லாஸ் ஏஞ்சல்ஸ்,
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) குறுகிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.
ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம் பெறும் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்தது. இதையடுத்து ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றது.
நாட்டு நாட்டு’ பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஆங்கிலேய இளைஞருக்கு போட்டியாக நடனமாடும் காட்சி பார்ப்பவர்களையும் துள்ளல் போட வைக்கும் நடன அசைவுகளை கொண்டது. கோல்டன் குளோப் விருது பெற்ற இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ”வயல்களின் புழுதியில் குதிக்கும் ஆக்ரோஷமான காளை போல.. உள்ளூர் அம்மன் திருவிழாவில் முன்னணி நடனக் கலைஞர் நடனமாடுவது போல.. மரச் செருப்புகளை அணிந்து கொண்டு குச்சியை வைத்து விளையாடுவது போல.. என் பாடலைக் கேளுங்கள்” என்ற அர்த்தத்தில் அந்த பாடலை எழுதி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.