சந்திரபூர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிமூர் தொகுதி பாஜக எம்எல்ஏ கீர்த்திகுமார் மீது போலீசில் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘எம்எல்ஏ கீர்த்திகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த எனது கணவரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.
நான் எனது கணவரை காப்பாற்ற முயன்றபோது, என்னையும் தாக்கினர். அப்போது எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். மேலும் எனது இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் தாக்கினர்’ என்று கூறியுள்ளார். அதையடுத்து கீர்த்திகுமார் அவரது ஆதரவாளர்கள் மீது ஐபிசி 354 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் எம்எல்ஏ கீர்த்திகுமார் போலீசில் அளித்த புகாரில், ‘எனது தாய் குறித்து சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துகளை அவர்கள் வெளியிட்டனர். அதனால் அவர்களை நேரில் சென்று விசாரித்தோம்’ என்றார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஆயுஷ் நோபானி கூறுகையில், ‘எம்எல்ஏ கீர்த்திகுமார் மீது பாலியல் வன்கொடுமை, கலவரம், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருடன் சேர்த்து மேலும் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கீர்த்திகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது. இரு தரப்பினர் மீதும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.