“அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது; சட்டத்தை திருத்துங்கள் நிதியமைச்சரே!" – சு.வெங்கடேசன்

அதானி குழுமத்தின் மோசடிகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதானி – மோடி

அதற்கு, `ரிசர்வ் வங்கி சட்டப்படி அதனை வெளியிட முடியாது’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், `சட்டம் குறுக்கே வந்தால் அதனை திருத்துங்கள்’ என நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, பிரிவு 45 E-ன்படி வங்கி கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை அவற்றை வெளியிட இயலாது என மறுத்திருக்கிறார்.

சு.வெங்கடேசன் எம்.பி

குடியுரிமை குறித்தே சட்ட திருத்தம் வருகிறது. ஒரு மாநிலத்துக்கு இருக்கிற விசேஷ அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆளுகைப் பகுதியாக மாற்றப்பட முடிகிறது. விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்த மூன்று சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. பின்னர் திரும்பப் பெற வேண்டி வந்தது. ஆனால் தங்களின் பல்லாயிரம் கோடி சேமிப்பு என்ன ஆகும் என்று மக்கள் பதறும்போதும், சட்டத்தின்கீழ் ஒளிந்துகொண்டு ரகசியம் என்கிறது ஒன்றிய அரசு. சட்டம் குறுக்கே வந்தால் சட்டத்தைத் திருத்துங்கள் நிதியமைச்சரே.

எல்.ஐ.சி, அதானி குழுமத்துக்கு தந்திருக்கும் கடன் டிசம்பர் 31, 2022 அன்று ரூ.6,347 கோடி, மார்ச் 5, 2023 அன்று ரூ.6,182 கோடி. எல்.ஐ.சி தந்திருக்கும் கடன், பாலிசிதாரர்களின் சேமிப்புகள்தான். கடன்கள், எல்லா முன்னெச்சரிக்கைகளையும் கணக்கில்கொண்டு வழங்கப்பட்டிருப்பதாக இந்த அரசு நிதி நிறுவனங்கள் விளக்கம் தருகின்றன. ஆனால், அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது. ஆகவே அதானி நிறுவனங்களிலுள்ள முதலீடுகள், கடன் பற்றி விசாரணை தேவை. வங்கிகள் வழங்கியிருக்கும் கடன், எல்.ஐ.சி தந்திருப்பது போல நிச்சயம் பல மடங்கு இருக்கும்.

நிர்மலா சீதாராமன்

இது மக்கள் பணம். அதை எவ்வளவு, யாருக்கு வங்கிகள் தந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. நிதியமைச்சரே… பறிகொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல், பறித்தவர் பக்கம் இருக்குமானால் அதை திருத்துங்கள். மக்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் சேமிப்பின் கதை என்ன… பணத்துக்கு பாதுகாப்பு என்ன… அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.