புதுடில்லி : தமிழகத்தின் எட்டு நகரங்கள் உட்பட நாடு முழுதும், 22 இடங்களில் நடந்து வரும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் முடிவடைகின்றன. மீதமுள்ள 78 நகரங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளன.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாசு ஏற்படுத்தாத வகையிலும், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய தீர்வுகள் அளிக்கக் கூடியதாக நகரை மாற்றும் வகையிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், 2015ல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நாடு முழுதும் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2016 முதல் 2018 வரை போட்டிகள் வாயிலாக, 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலுார் உட்பட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள், மற்ற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நகரத்துக்கும் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு, 500 கோடி ரூபாயைச் செலவிடும். இதே தொகையை மாநில அரசுகளும் செலவிடும். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
ஆக்ரா, வாரணாசி, புனே, ஆமதாபாத் உட்பட, 22 நகரங்களில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைய உள்ளதாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள, 78 நகரங்களில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளன.
‘இந்தாண்டு ஜன., நிலவரப்படி, 1.81 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,804 திட்டங்களில், 98 ஆயிரத்து, 796 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,246 திட்டங்கள் முடிந்துள்ளன’ என, பார்லிமென்டில் சமீபத்தில் தெரிவிக்கப் பட்டது.
தமிழகத்தில் எங்கு?
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலுார் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய எட்டு நகரங்களில் அடுத்த மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிய உள்ளன. துாத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்