பாஜக-வில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் மாநில அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாகவும் சிவபாலன் பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜகவை சேர்ந்த பலர் அண்மை காலமாக
, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவை தனியே கழட்டி விடப்படும் நிலை நெருங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக பாஜக-வில் தீவிரமாக பணியாற்றி தற்போது ஒபிசி அணியின் மாநில செயலாளராக உள்ள சிவபாலன் பாஜகவில் இருந்து விலகி திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்த சிவபாலன், செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜகவில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை. பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. சமூக வலைதளங்களில் ஒரு சிலர் செய்யும் வேலை ஏற்றுகொள்ள முடியவில்லை. மாநில அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது, இந்து சகோதரர்களை ஒரு வாக்கு வங்கியாக தான் பாஜக பயன்படுத்துகிறது. அவர்களது வாழ்கையை முன்னேற்ற எந்த ஒரு வேலையும் பாஜக செய்யவில்லை. இதனால் தான் பலரும் எல்லோரையும் அரவணைக்கும் திமுகவில் இணைகிறார்கள் என்றார்.
மேலும், பாஜக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கவில்லை வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதை ஏற்க முடியாது. தமிழர்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை மாற்ற சதி செய்கிறார்கள்.
பாஜக இரட்டை நிலைப்பாட்டை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வருகிறது. கல்வி கடன் திரும்ப கட்ட முடியாத மாணவர்களை சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் வீடுகளை கூட பறிமுதல் செய்த வரலாறு உள்ளது. ஆனால் பாஜக அரசு கார்பரேட் பெறும் முதலாளிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து உள்ளது என குற்றம்சாட்டினார்.