தன்னை தானே நேசிப்பதன் அடுத்தக்கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்யும் வழக்கும் வெளிநாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டும் பிரேசிலியன் மாடல் அழகியான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டார். அதேபோல் அதே ஆண்டில் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளம் வழக்கம் இந்தியாவில் இல்லாதிருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அதுவும் நடந்தது. குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் 24 வயதான ஷமா பிந்து, கடந்த 2021 ஜூன் 11ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் இந்த வழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த திருமண நிகழ்வு பெற்றோர் மற்றும் சொந்த பந்தகங்கள் முன்னிலையில் ஜூன் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க அனைவரின் ஆசிர்வாதத்தோடு கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் ஹனிமூனிற்கு கோவாவிற்கும் சென்றுள்ளார்.
இதுகுறித்து எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்ற ஷமா பிந்து கூறும்போது, “இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. அதை முதல் ஆளாக நான் முன்னெடுக்கிறேன். இதில் என்ன சிறப்பு அம்சம் எனில் இதை ஒரு பெண் செய்கிறாள் என்பதுதான். தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது என்பது பலருக்கும் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இதில் நான் சொல்ல வருவது இதை ஒரு பெண் முன்னெடுக்கிறாள் என்பதுதான்.
நான் திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். குடும்பத்தினருடைய முழு ஆசிர்வாதத்துடன் தான் செய்கிறேன். உனக்கு பிடித்ததை செய் என கூறிவிட்டனர்” என்று ஷமா பிந்து கூறினார்.
இந்தநிலையில் அதேபோன்றதொரு சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது, ஆனால் அதில் திடீர் திருப்பமும் நடந்துள்ளது தான் சுவாரஸ்யம். கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி அர்ஜென்டினாவைச் சேர்ந்த சோஃபி மௌரே என்ற 25 வயதுடைய பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
அதன்படி தன்னை திருமணம் செய்துகொள்வதற்காகத் திருமண ஆடை மற்றும் கேக் போன்றவற்றைத் தானே தயார் செய்தாக பதிவிட்டார். ஆனால் 24 மணிநேரத்திற்குப் பிறகு, சோஃபி ஒரு நாள் தனது சொந்த நிறுவனத்தில் நேரத்தைச் செலவழித்த பிறகு பிப்ரவரி 21 தனது விவாகரத்தைத் தொடர முடிவு செய்தார்.
விவாகரத்து தொடர்பாக அவர் கூறும்போது, “இன்று, என் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில், நான் ஒரு திருமண ஆடையை வாங்கி என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு திருமண கேக் ஒன்றையும் செய்தேன்” என்று கூறினார். சோஃபியின் இந்த பதிவிக்கு பல்வேறு தரப்பினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.