புதுச்சேரியில் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “2023-24-ம் நிதியாண்டில் ரூ.11,600 கோடிக்கான மக்கள் நலன்சார்ந்த வரவு செலவு திட்ட அறிக்கையை பேரவையின் பார்வைக்கு ஒப்புதலுக்காக சமர்பிக்கிறேன். அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 வீதம், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.126 கோடி செலவாகும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ரூ.100 கோடிக்கு மேல் முதலீட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும்பொருட்டு, நிலம், கட்டடங்கள், இயந்திரங்களின் மதிப்பீட்டிற்கு, தொழில் தொடங்கப்படும் தேதியிலிருந்து முதல் 5 ஆண்டுக்காலத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதவிகித மானியம் வீதம்… மொத்தம் 5 சதவிகித மானியம் வழங்கப்படும்.
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டத்தில் அனைத்த சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். வணிகர் நல வாரியத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசுக்கு குறைந்தளவே வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், நாம் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு காலத்தோடு சென்றடைவது இன்றியமையாதது.
இதற்கு அரசு ஊழியர்களின் பணி மகத்தானது. இதை கருத்தில் கொண்டு அரசுத்துறைகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும், தகுதிவாய்ந்த அரசு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மத்திய அரசால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்கான ஈட்டுத்தொகை கடந்த ஜூன் மாதம் 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. மேலும் பெட்ரோல், டீசல்மீதான வாட் வரி மத்திய அரசால் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக எனது அரசு பொதுமக்களின் நலன் கருதி வரியைக் குறைத்தது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு எனது அரசின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுவை அரசுக்கு மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியாக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்திருக்கின்றனர்.
இதற்காக எனது அரசு பிரதமர், உள்துறை மற்றும் நிதியமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2023-2024-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ.11,600 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆட்சிப்பரப்பின் சொந்த வருவாய் ரூ.6,154,54 கோடியும், பேரிடர் நிவாரண நிதியையும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,117,77 கோடியும், மத்திய அரசின் திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.620 கோடியும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையில் பெறும் கடன், பேரம் பேசி வாங்கும் கடன் ஆகியவற்றின் மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதி ரூ.1,707,69 கோடி ஆகும். இதில் மூலதன உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவினங்களுக்காக பேரம் பேசி வாங்கும் கடன் சென்ற ஆண்டைவிடக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிருக்கான சிறப்பு நிதி, பசுமை சிறப்பு நிதி, இளையோர் சிறப்பு நிதி ஆகியவற்றுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக நிதியாண்டில் ரூ.2,391 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரும் ஆண்டுகளில் அரசு இதில் அதிக கவனம் செலுத்தும். பெண்களுக்கு அதிகாரம், சமவாய்ப்பு, முடிவெடுக்கும் உரிமை ஆகியவற்றை வழங்கவும், அவர்கள் பயன்பெறும் வகையில் மகளிர் நிதி செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்கள் தனி நிதியகத்துக்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இளையோர் சிறப்பு நிதியத்துக்கு ரூ.504 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 15 வயது முதல் 29 வயது வரையுள்ள இளையோரின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் எனது அரசு பல்வேறு துறைகளில் இந்த நிதியத்தின் மூலம் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது.
பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் குறித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான பசுமை நிதி அறிக்கையை தயார் செய்யும் முயற்சியில் ஆற்றல், ஆராய்ச்சி நிறுவன உதவியுடன் செயல்முறையை எனது அரசு தொடங்கியிருக்கிறது. அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவற்றுக்குச் செலவிடப்படுகிறது. பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடான ரூ.11,600 கோடியில் ரூ.2,542.81 கோடி சம்பளத்துக்காகவும், ரூ.1,455.32 கோடி ஓய்வூதியத்துக்காகவும், ரூ.1,850.75 கோடி கடன் மற்றும் வட்டி செலுத்தவும், ரூ.1,690 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அரசின் முக்கிய செலவினங்களான முதியோர் ஓய்வூதியம், பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,856 கோடியும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.350 கோடியும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக ரூ.1,089.91 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.9,976.36 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும், ரூ.1,623.64 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 6-வது முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.