புதுடில்லி : ‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது; இது, சமூக மதிப்புகள், தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது. அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன.
பல உயர் நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை தனக்கு மாற்றச் செய்து, உச்ச நீதிமன்றம் இதை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஒரே பாலினத்தினர் உறவு கொள்வதை குற்றமாக பார்க்கும் சட்டப் பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் 2021ல் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக, ஒரே பாலின திருமணம் செய்வதற்கு சட்ட அங்கீகாரம் கேட்பது அடிப்படை உரிமையாகாது.
நம் நாட்டில் உள்ள சட்டங்கள் மற்றும் பல மதத்தினரின் தனிநபர் சட்டங்கள், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைவது தான் திருமண பந்தம் என்று கூறியுள்ளன. திருமண பந்தத்தை புனிதமாக கருதுகின்றனர்.
எந்த ஒரு சட்டமும், ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதை அங்கீகரிக்கவில்லை.
நம்முடைய மதச் சம்பிரதாயங்கள், பாரம்பரியம், சமூக மதிப்புகள் ஆகியவையும், ஆணும், பெண்ணும் வாழ்க்கையில் இணைவது தான் திருமணம் என்று குறிப்பிடுகின்றன.
இதற்கு எதிராக, ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்தால், அது சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் குழப்பங்களை உருவாக்கிவிடும்.
மேலும், இது போன்ற சலுகைகள் அளிப்பது தொடர்பாக, பார்லிமென்ட் தான் விவாதித்து முடிவு எடுக்க முடியும்; நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்