பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக, விஷம் கலந்த பொடியை தூவி காகங்களை கொன்றுவந்துள்ளார் ஒருவர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்துள்ளன. பின்னர் இறந்து விழுந்த காகங்கள் சிறிது நேரம் கழித்து தொடர்ச்சியாக காணாமலும் போயுள்ளன. காகங்கள் மாயமாகியதால், இறந்த காகங்களை மர்ம நபர்கள் யாரும் எடுத்துச் செல்கின்றனரா என்ற சந்தேகம் நிலவிவந்தது.
இந்நிலையில் இன்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில், ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் போட்டு நிரப்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்குசென்ற விவசாயி நாகராஜை அந்நபர் கண்டதும், அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்த மர்ம நபரை துரத்திச் சென்று மடக்கிபிடித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அங்கு விரைந்து சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (37) என்பவர் தான் காகங்களை கொன்று வந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் சூர்யாவை கைது செய்து போலீசார், அவரிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட காகங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, வெண்படை நோயை குணப்படுத்துவதற்காக மருந்து தயாரிக்கவே காகங்களை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவர் காகங்களை உணவு விடுதிகளுக்கு பிரியாணி தயாரிக்க கொடுப்பதற்காக கொன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM