புதுடெல்லி: டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆபாச நடன நிகழ்ச்சிக்கு டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6ம் தேதி ஹோலி மிலன் விழா நடைபெற்றது. விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடினார். அதனை அங்கிருந்தவர்கள் பார்த்து உற்சாகமாக அவர்களும் சேர்ந்து ஆடினர்.
இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ விவகாரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் முறையற்றதாக உள்ளது. நீதித்துறை குறித்த எண்ணத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீர் குலைத்துவிடும். இதுகுறித்து வழக்கறிஞர் அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கூட்டமைப்பு செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரம் ெதாடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.