தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி முதல்வர்
தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,
“பரீட்சை டென்ஷன் வேண்டாம். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப் போகிறது. எனவே உறுதியுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தன்னம்பிக்கை மற்றும் உறுதி இருந்தால் பாதி வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம். தேர்வு என்பது உங்களை சோதிக்கும் விஷயம் அல்ல. அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வது. புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். உங்கள் வெற்றிக்காக உங்கள் குடும்பத்தில் ஒருவராக நானும் வாழ்த்துகிறேன். All The Best”
என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
குஷ்பு வரவேற்பு
அந்த வகையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டரில்,
“பிரதமர் மோடி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Pariksha Pe Charcha நிகழ்ச்சி பிரதமர் மோடியின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.
நீட் தேர்வு
ஏனெனில் மாணவர்களை சரியான திசையில் வழிகாட்ட வேண்டியது நம்முடைய முதன்மையான கடமை. இதேபோல் நீட் தேர்வின் மகிமையையும் உணர்ந்து பிரதமரை மேலும் பின்பற்றினால் பெரிதும் வரவேற்போம்”
எனப் பதிவிட்டுள்ளார். இதில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். ஒன்று Pariksha Pe Charcha. இது 2018ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வரும் நிகழ்ச்சி ஆகும்.
Pariksha Pe Charcha
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் ஆலோசனை நடத்துவார். குறிப்பாக பொதுத்தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்குவார். மன அழுத்தம் ஏற்படாமல் இயல்பாக எப்படி தேர்வுகளை அணுகுவது என ஆலோசனைகள் வழங்குவார். இதுபோன்ற ஒரு விஷயத்தை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிலைப்பாடு
இரண்டாவது நீட் தேர்வு. இதை தமிழ்நாடு அரசு வரவேற்க வேண்டும் என்பது குஷ்புவின் கருத்து. ஆனால் நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை கலைத்துவிடும் என்ற விமர்சனம் நீடித்து வருகிறது. எனவே தன்னுடைய ஆட்சியில் எப்படியாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்துள்ளார்.
ஸ்டாலின் திட்டம்
சமீபத்தில் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி Behindwoods யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது கூட, நீட் தேர்விற்கு எப்படியாவது விலக்கு பெற்றுவிட வேண்டும் என்பதை முக்கியமான குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எனவே நீட் விஷயத்தில் மட்டும் பாஜகவின் எண்ணம் ஈடேறாது என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.