வேலூரைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவியும், தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரண்டுப் பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். அதே நேரம், காணாமல்போன தங்கள் மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, மாணவியின் பெற்றோர் பாகாயம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
போலீஸாரும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து அவரைத் தேடி வந்தனர். இதையறிந்த மாணவி தன் காதல் கணவனுடன் இரண்டு நாள்களுக்கு முன்பு பாகாயம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதைக் கேள்விப்பட்ட இருவரின் பெற்றோர்களும் அங்கு சென்றனர். ‘காதல் ஜோடி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் என்பதால், முடிவை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்’ என போலீஸார் தெரிவித்தனர்.
அப்போது, தங்களுடன் வந்துவிடுமாறு மாணவியிடம் அவரின் பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ஆனால் மாணவி, பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து, அவர் பெற்றோர் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதே சமயம், இளைஞன் திடீரென தன்னுடைய பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததால், அவரை நம்பி வந்த காதல் மனைவி அதிர்ச்சியடைந்தார். ‘எங்களுடைய மத முறைப்படி திருமணம் செய்து கொண்டால்தான், அது திருமணமாகக் கருதப்படும். எனவே, அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்’ எனச் சொல்லிவிட்டு, காதலியைக் காவல் நிலையத்திலேயே தவிக்கவிட்டு விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.
அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அழுது கொண்டிருந்த மாணவியை போலீஸாரே மீட்டு, அரியூர் பகுதியிலுள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கவைத்தனர். இந்த நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த மாணவி, அதிகாலை வேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார்… என்பது குறித்து காப்பக நிர்வாகிகள் கொடுத்தப் புகாரின்பேரில், அரியூர் போலீஸார் தேடி வருகின்றனர். மகளை மீண்டும் கண்டுபிடித்து அழைத்துவருவதற்காக பெற்றோரும் பதறிப்போய் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.