திருப்பதியில் 2 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22-ம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 22-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மற்றும் விஷ்வகேஸ்வரருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது.

மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.