கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(14) காலை நடைபெற்றது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
போதைப் பொருள் பாவனை அதிகரித்தமை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையினை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றினை துறைசார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கி அடுத்த இரு வாரத்தினுள் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
நீர்ப்பாசனம், போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், காணி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான பொதுவான விடயங்கள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.