நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. ராகுல் காந்தி குறித்த சர்ச்சையால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே பேசியது முக்கியத்துவம் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா
அதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் விருதிற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற
’நாட்டு நாட்டு’
பாடல் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதிற்கு
’த எலிபென்ட் விஸ்பரர்ஸ்’
தேர்வானது. இந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதற்கு மாநிலங்களவை எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கார்கே கருத்து
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் பேசுகையில், இந்திய கலைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு உலகளாவிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள் என்று தெரிவித்தார். பின்னர் நடந்த விவாதத்தின் போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த இரண்டு விருதுகளை பெற்றவர்களை நான் மனமார பாராட்டுகிறேன்.
கிரெடிட் எடுத்துக்காதீங்க
இவை தென்னிந்தியாவை சேர்ந்த படைப்புகள் என்பதால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இந்த படத்தை நாங்கள் தான் இயக்கினோம், நாங்கள் தான் பாட்டு எழுதினோம், மோடிஜி தான் படத்தை இயக்கினார் என ஆளுங்கட்சி உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த படைப்புகளில் நமது நாட்டை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
அவையில் சிரிப்பலை
இதைக் கேட்டதும் அவைத் தலைவர் முதல் ஆளுங்கட்சி எம்.பிக்கள் வரை பலரும் வாய் விட்டு சிரித்தனர். கிட்டதட்ட மாநிலங்களவையே சிரிப்பலையில் மூழ்கியது. நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், ”ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது மிகச்சிறந்த செய்தி.
வாழ்த்து மழை
இந்த கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன். இவ்வளவு மகிழ்ச்சியை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க நன்றி. ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ’த எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்திற்கு கிடைத்த விருது பற்றி குறிப்பிடுகையில், ”முதுமலை வனப்பகுதியில் யானைகள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் பற்றி மனதை நெகிழ்விக்கும் வகையில் ஒரு கதையை உருவாக்கியுள்ளனர். இது நம் நாட்டையும், ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பெருமைப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.