வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுநர் பணியில் சுரேகா யாதவ் என்ற பெண் நியமனம்.!

மும்பை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன் முறையாக சுரேகா யாதவ் என்ற பெண் ஓட்டுநர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் விரைவு ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இதன்படி, மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியாற்றுவார். இதுபற்றி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், பெண் சக்தியால் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

நாட்டில் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முறையாக, புதுடெல்லியில் இருந்து கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதன்பின்னர், 2-வது ரயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காந்திநகர் மற்றும் மும்பை சென்டரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், பிரதமர் மோடியால் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கூட, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலைய முனையத்தில் இருந்து சோலாப்பூர் வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பிரதமரால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.