அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது.
அனிதா நினைவு அரங்கம்
அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள்.
நீட் தேர்வு ரத்து ரகசியம்!
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறி வந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே. நான் மோடியை சந்தித்தபோது கூட நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தேன்.
தமிழக அரசின் திட்டங்கள்
தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என அமைச்சர் உதயநிதி கூறினார்.