புதுடெல்லி: தெலங்கானா அரசைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளாவை போலீசார் இன்று (மார்ச் 14) கைது செய்தனர்.
பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஒய்எஸ் ஷர்மிளா, இதைக் கண்டித்து டெல்லியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார், ஷர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து செய்தனர். கைதாகி வாகனத்தில் ஏறும்போது அவரும், தொண்டர்களும் ”கேசிஆர் (தெலங்கான முதல்வர் கே. சந்திரசேகரராவ்) டவுன் டவுன்” என்று முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்எஸ் ஷர்மிளா, “பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம் மேல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை வெளிச்சத்திற்கு கொண்டுவர டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய ஊழலையும், இந்த விவகாரத்தில் எங்களின் இரண்டாண்டு கால போராட்டத்தையும் இந்த பேரணி வெளிச்சத்திற்கு கொண்டுவரும்.
இந்த திட்டத்திற்கான மதிப்பு ரூ. 38 ஆயிரத்து 500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.1.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், இதன்மூலம் 1.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் நியாயப்படுத்துகிறார். இந்த திட்டம் ஒரு மாபெரும் தோல்வி என்பதையே இது காட்டுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரரும், ஒரு குறிப்பிட்ட குடும்பமுமே பயனடைந்துள்ளன. இந்த திட்டம் ஒரு பேரழிவு; ஒரு கறை. இந்த திட்டத்தின் மூலம் அரசு கஜானாவை கேசிஆர் கொள்ளையடித்திருக்கிறார். தரமில்லாத கட்டுமானங்கள் காரணமாக அடுத்த மூன்று வருடங்களில் இது நொறுங்கி விடும். இந்த திட்டத்திற்காக மத்திய நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கியிருப்பதால், இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்ப ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது” என தெரிவித்திருந்தார்.