அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான விருதை, RRR திரைப்படத்தின் `நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘The Elephant Whisperers’ ஆவணப்படமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன.
இதற்கு, இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், ராஜ்ய சபாவில் நடந்த இந்திய ஆஸ்கர் விருது வெற்றியாளர்கள் பற்றிய சிறப்புக் குறிப்பின்போது பேசியது அவையில் சிரிப்பலையைத் தூண்டியது.
அதாவது இந்தியா ஆஸ்கர் வென்றது குறித்துப் பேசுகையில், “இந்தச் சாதனைகள், இந்திய கலைஞர்களின் பரந்த திறமை, மகத்தான படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உலகளாவிய பாராட்டைப் பிரதிபலிக்கின்றன. உண்மையில் இது நம்முடைய உலகளாவிய எழுச்சி, அங்கீகாரத்தின் மற்றொரு அம்சமாகும்.
மேலும், நான் ஒரு வழக்கறிஞராகாமல் இருந்திருந்தால், நிச்சயம் நடித்துக்கொண்டிருந்திருப்பேன்” என்று ஜெக்தீப் தன்கர் கூறினார். இவ்வாறு அவர் கூறியதையடுத்து அவை சற்று சிரிப்பலையில் மூழ்க, `ஒருவேளை அப்படி நடந்திருந்தால், இப்போது நாங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை உங்களுக்கும் செய்திருப்போம்’ என காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூற, ஜெக்தீப் தன்கரும் சிரித்துக்கொண்டார்.
இவர்களுக்கு முன்னதாக, ம.தி.மு.க எம்.பி வைகோ, `2009-ம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு இரண்டாவது முறையாக ஆஸ்கர் கிடைத்திருக்கிறது’ என பெருமிதம் கொண்டார்.