சாலையில் சென்ற காரை தூக்கி வீசிய காட்டு யானை.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

போச்சம்பள்ளி அருகே சப்பாணிப்பட்டி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை, காட்டு யானை தூக்கி வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை புகுந்த இரண்டு காட்டு யானைகள் அங்குள்ள பகுதிகளில் சுற்றித் திரிவதால் பதற்றமான சூழ்நிலை உள்ளது. இதனிடையே, போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாய்பாபா கோவில் பூசாரியான ராம்குமார் (27), யானையின் முன்பு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
image
ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சப்பாணிப்பட்டி அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த மாருதி காரை தூக்கி வீசிய பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி திருப்பதி என்பவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை வந்ததை அறியாமல் அதிர்ச்சியில் காரை நிறுத்தினார். அப்போது காட்டு யானை காரை தூக்கி வீசியது.
image
இதில் காரில் இருந்த இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து யானை நிலப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வனச்சரக அலுவலர்கள் தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.