கன்னியாகுமரி: தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் அரசு பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் ரூ.800 கோடி செலவில் பழுதடைந்த அரசு தொடக்கப் பள்ளிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா போன்ற பிரச்சினைகளை சமாளித்து கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட பொழுதிலும், நிதி மேலாண்மை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மிகச் சிறப்பாக உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.85 ஆயிரம் கோடி வழங்கிய மத்திய அரசு, கடந்த பட்ஜெட்டில் அதை ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளது. ஒன்றிய அரசு நிதி குறைத்து கொடுத்தாலும் தமிழகத்தில் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.