அரசு பணியில் இருப்பவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. காவல்துறையின் விதிகள் சாமானியர்களுக்கு தான் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற மனப்பான்மையில் சில அரசு ஊழியர்கள் தலை கனத்துடன் இருப்பதை பொது இடங்களில் பார்த்திருப்போம். அதே போல, சாமானியர்கள் சிலருக்குள்ளும் அப்படியான தலை கனம் இருக்கத்தான் செய்கிறது.
சாலை விதிகளை மீறி போலீசில் சிக்கும் அரசு ஊழியர்கள் சிலர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், நானும் டிப்பார்ட்மெண்ட் ஆளுதான் என்றும் கூறுவதால் காவலர்களுக்கு தங்கள் பணியை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. காவல்துறையில் கீழ் மட்டத்தில் உள்ள காவலர்கள் இது பற்றி யாரிடம் சொல்வது என தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைகவசம் அணியாமல் அரசு அரசு ஊழியர்கள் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக எச்சரிக்கை செய்துள்ளார்.
தஞ்சாவூரில் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சை பெரிய கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி தஞ்சையின் முக்கிய நகர வீதியின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோயிலில் நிறைவடைந்தது.
விபத்தில்லா தஞ்சையை உருவாக்க வேண்டும் எனவே அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஆட்சியர் கூறுகையில் தலைகவசம் அணியாமல் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சென்றால் அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் தலைக்கவசம் அணியாமல் அரசு ஊழியர்கள் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆட்சியரின் இந்த உத்தரவு தஞ்சை மாவட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.