புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நேற்று அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இரண்டு அவைகளும் இன்று காலை கூடின. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அவை நடவடிக்கைத் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா சபையின் மாண்பை பாதுகாத்து அவை நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தததால் மக்களவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் இரண்டு மணிக்கு மீண்டும் மக்களவைக் கூடியது. அப்போது தனது லண்டன் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடந்து நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று காலையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் ஆஸ்கர் விருது வென்ற படக் குழுவினருக்கு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். இந்த அமளி காரணமாக, மாநிலங்களைவைத் தலைவர் அவையை மதியம் வரை ஒத்திவைத்தார். பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த அமளி காரணமாக, மாநிலங்களைவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களைவையில் இன்று பேசிய அவைத் தலைவர் பியூஷ் கோயல், ”நாங்கள் நேற்று ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பி இருந்தோம். இந்தியாவும் நாடாளுமன்றம் உட்பட அதன் அமைப்புகள் அவமதிக்கப்பட்ட விதம் தான் அது. மக்களவையும் மாநிலங்களவையும் நாடாளுமன்றத்தின் அங்கங்கள். அவை அவமதிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக நாடாளுமன்றம் முழுமையாக அவமதிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். இத்தகைய போக்கை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அந்த நபர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி சக்திசிங் கோக்லி, பியூஷ் கோயலுக்கு எதிராக சிறப்பு உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்திருந்தார். அதில், மற்றொரு அவையின் உறுப்பினர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி அவையின் விதிகளை மீறி இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.