துரத்தப்பட்ட யானை குட்டிகளை தேடும் முயற்சியில் ஆஸ்கர் விருது பட நாயகன்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 95வது ஆஸ்கர் விருது பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது கிடைத்தது. இன்னொரு பக்கம் 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்கிற டாக்குமென்ட்ரி படத்திற்கும் சிறந்த டாக்குமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியரின் அர்ப்பணிப்பு உணர்வு, யானைகளிடம் அவர்கள் காட்டும் பாசம் ஆகியவை குறித்து உணர்வு பூர்வமாக இந்த டாக்குமென்டரி உருவாக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இந்த டாக்குமென்டரி நாயகன் என்றால் அது பொம்மன் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது தான் நடித்த டாக்குமென்ட்ரி படத்திற்கு மிக உயரிய ஆஸ்கர் விருது கிடைத்திருந்தாலும் அதுபற்றி சந்தோஷப்பட்டு கொண்டாடும் மனநிலையில் தற்போது பொம்மன் இல்லை. ஒரு பக்கம் ஆஸ்கர் விருது மற்றும் அதன் பெருமை பற்றிய விவரங்கள் பொம்மனுக்கு அவ்வளவாக தெரியாது என்றாலும், இன்னொரு பக்கம் அவர் சமீபத்தில் தருமபுரி அருகில் உள்ள பாலக்கோட்டில் மின்வேலியில் சிக்கி இறந்த மூன்று யானைகளின் கூடவே திரிந்த இரண்டு குட்டிகளை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த யானைகள் இறந்த சமயத்தில் அந்த இரண்டு குட்டிகளும் அங்கிருந்து நகராமல் பாச போராட்டம் நடத்தினாலும் அங்கிருந்து சிலர் அவற்றை வெடிவைத்து துரத்தி விட்டனர். தற்போது அவற்றை தேடும் பணியை வனத்துறையினர் பொம்மனிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த டாக்குமென்ட்ரியில் காட்டப்பட்டுள்ளது போல எப்படி ரகு மற்றும் பொம்மி ஆகிய யானைக்குட்டிகளை நான் வளர்த்தேனோ அதேபோல இந்த இரண்டு யானைக்குட்டிகளையும் தேடி கண்டுபிடித்து அவற்றையும் நானே வளர்ப்பேன். தற்போது அவற்றை தேடும் முயற்சியில் தான் நான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பொம்மன்.