விழுப்புரம்: “அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு போதைப் பொருட்கள் கொடுத்து, அவர்களின் மனநலம் பாதிப்படையச் செய்து, பின்னர் அவர்களை மதமாற்றம் செய்துள்ளனர்” என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, குரங்குகளை வைத்து அச்சுறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 15 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதனையடுத்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் தலைமையிலான குழுவினர் இன்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரமத்தில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் சென்று தேசிய குழந்தைகள் நல ஆணைய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு, இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாரிடமும், ஆட்சியர் பழனியிடமும் விவரங்களை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற இக்குழுவினர் அங்கு அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
பின்னர், ஆசிரமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில அறைகளை மட்டும் மூடி சீல் வைக்க தேசிய குழந்தைகள் நல ஆணைய குழு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆசிரம கட்டிடத்தில் உள்ள ஆசிரம நிர்வாகி பயன்படுத்தி வந்த அறை மற்றும் மனநலம் குன்றியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறை என 2 அறைகள் மூடப்பட்டு தேசிய குழந்தைகள் நல ஆணைய குழுவினர் மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பின்னர் தேசிய குழந்தைகள் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் கூறியது: “இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து கள ஆய்வு நடத்த டெல்லியில் இருந்து மூன்று குழுக்களாக நாங்கள் வந்துள்ளோம். . இந்த ஆசிரமத்துடன் புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து மேலும் ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, நாகாலந்து உள்ளிட்ட 5 மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது.
இந்த ஆசிரம கட்டிடத்தில் 60 பேர் தங்க வைத்து பராமரிக்க மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் 140-க்கும் மேற்பட்டோரை இந்த கட்டிடத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செயற்கையான முறையில் போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை எங்கிருந்து வாங்கினார்கள் என விசாரிக்க சொல்லியுள்ளோம். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் எங்களிடம் வாங்கினார்களா என 15 நாட்களுக்குள் அறிக்கை தருகிறோம் என்று சொல்லியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 குழந்தைகள் நலகாப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 2 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்பட்டு வந்தது. அதில் ஒன்றுதான் அன்பு ஜோதி ஆசிரமம். அதன் 2 அறைகளை பூட்டி சீல்வைத்துள்ளோம். மற்ற காப்பகங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும்வகையில் டிஎஸ்பி, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம். அங்கு பணிபுரிபவர்களிடமும் விசாரணை நடத்திட அறிவுறுத்தியுள்ளோம். 35,000 போதை மருந்துகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வந்ததா? அல்லது வேறு மருத்துவமனைகளிலிருந்து, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வந்ததா?. இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன், மருந்துகள் எங்கிருந்து வந்தது என்று 15 நாட்களுக்குள் அறிக்கை மூலம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளார். மேலும், இரவு நேரங்களில் ஜெபம் செய்து மதமாற்றம் வேலை நடந்துள்ளது. இங்கு சேர்க்கப்பட்டிருந்த குழந்தையின் தாய் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். டார்க் ரூம் எனப்படும் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று உடல்நிலை சரியில்லாதவர்களை சரியாகிவிடும் என்று கூறி மத மாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். காப்பகத்தில் காணாமல்போன 15 பேர் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 2 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் விசாரணைக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பிப்பதாக கூறியுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்ட சிறியவர்கள், பெரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. போதை மருந்துகளைக் கொடுத்து அடிமையாக்கி வைத்திருந்தனர். போதை மருந்துகளை கொடுத்து மத மாற்றம் செய்யும் இடமாக ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். தனிநபராக இதையெல்லாம் செய்யமுடியாது. இவருக்கு பின்னால் ஓர் இயக்கமே இருந்திருக்கலாம். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இங்கு விசாரணை நடத்தப்பட்ட அறிக்கையை ஆணையத்திடம் சமர்பிப்போம். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு நாட்களில் மத்திய அமைச்சகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்” என்றார்.