வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொண்டர்களும் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 28ம் தேதி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து இம்ரானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோதனையின் போது இம்ரான் வீட்டில் இல்லை. இதனால், போலீசார் திரும்பிச்சென்றனர். அவர் வீட்டின் சுவரேறி குதித்து வெளியே சென்றதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை வீதித்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நடக்கும் விசாரணைக்கு இம்ரான் கான் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்து, வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார், இம்ரான்கான் வீட்டிற்கு விரைந்தனர். போலீசாரின் பாதுகாப்பு கவச வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களுடன் அங்கு சென்றனர். போலீசார் வருகையை அறிந்த இம்ரான் கான் கட்சியினரும் அங்கு குவிந்துள்ளனர். அப்போது போலீசார் மற்றும் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement