அமெரிக்காவில் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேரை மிரட்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்வின் ராஜ் மாதுர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ரஷ்ய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்தச் சீன யுவானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வங்கிகள் மற்றும் வர்த்தகர்களை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது.
சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் அதில் பணம் வைத்திருந்தவர்களுக்கு தங்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன். மேலும், இந்த இழப்பை அமெரிக்கர்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48,000-த்தை தாண்டியிருக்கும் நிலையில், பேரழிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கு நகரங்களை (Container Cities) அமைக்க அதிகாரிகள் விரைந்திருக்கின்றனர்.
உக்ரைன் – ரஷ்யா போர் துவங்கிய பின்னர் முதல் முறையாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட அங்கீகாரத்தை நீட்டித்து, அவர்களின் மனிதாபிமான அந்தஸ்தைப் புதுப்பித்திருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
கனடாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ட்ரக் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அந்த நாட்டு அரசு மீண்டும் விசாக்களை வழங்க துவங்கியிருக்கிறது.
பேரணி ஒன்றில் காவல்துறை அதிகாரிகளையும், நீதிபதி ஜெபா சவுத்ரியை மிரட்டியதற்காக, பதியப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான் கைதுசெய்யப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படாமல், சவுதியிலிருந்து பெறப்பட்ட ஆபரணங்களை மீண்டும் ஒப்படைக்க முன்னாள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஒப்புக்கொண்டிருக்கிறார்.