1 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் தட்டுப்பாடு… அதிர வைக்கும் பின்னணி! முழு விவரம்

கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரூ.3 மட்டுமே அரசு உயர்த்தியது.
இந்நிலையில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் தென் சென்னை பகுதியில் உள்ள மயிலாப்பூர், பெசன்ட் நகர், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தும் மேற்கூறிய கொள்முதல் விலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் தகவல்கள் இங்கே…

ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு கிடைக்கக்கூடிய பால் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
image
இடன் பின்னணியை இங்கு பார்ப்போம். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தற்போது ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது். ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ரூ.7 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு  10 ரூபாய் உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டது. எனவே, தற்போது தங்களது கோரிக்கையின்படி மீதமுள்ள 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை பெருநகர மக்களின் தேவைக்காக மட்டும் தினமும் 14 லட்சம் லிட்டர் பால் தேவை. இதற்காக அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 3 பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்ய வேண்டும். தற்போது இதில் ஒரு லட்சத்துக்கும் மேலான லிட்டர் பாலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
image

சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள பிரச்சனை காரணமாக பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்பது சொல்லப்படுகிறது. இதனால் முகவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பால் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பால் உற்பத்தியாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.