சென்னையில் நடைபெற்ற சிஐஐ யின் முன்னோக்கிய தமிழக எழுச்சி மாநாட்டில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், `தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு 1.76 லட்சம் கோடியை தொட்டுள்ளது. தமிழகம் இப்போது தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மாநிலத்தின்இந்த தொடர்ச்சியான வளர்ச்சியின் மூலம் வரும் ஆண்டுகளில் மேலும் உயர்ந்த இடத்தை பிடிப்போம் என்று நம்புகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகள் செய்த 60 பில்லியன் டாலர் முதலீடுகள் வரும் ஆண்டுகளில் 75%-க்கும் அதிகமான விகிதத்தை எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழகத்தில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்டமுடியும். அதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மேலும் இந்த இலக்குகளை எட்ட, அடுத்த 7 ஆண்டுகளில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து சுந்தரம் கிளேட்டன் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு கூறுகையில், “இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து வலுவான உற்பத்தி மாநிலமாக உள்ளது. மிகவும் தொழில் மயமானது மற்றும் ஜிடிபியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அற்புதமான பணி நெறிமுறை உள்ளது. திறன் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் இங்கு வலுவான தொழில் நிர்வாகம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 2030ஐ நோக்கிய வளார்ச்சியில், பல MNC -கள் இங்கு தொழில் தொடங்கும் என நம்புகிறோம்” என்றார்.