சேலம்: சேலம் அருகே செல்ஃபி மோகத்தால் இளைஞர் ஓடும் ரயில் முன்பு நின்று செல்போனில் படம் பிடித்தபோது, ரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பொறியியல் பட்டதாரியான காங்கேயத்தான் (22). இவர் நேற்று நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) மூவருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்-விருத்தாசலம் ரயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரயில் வந்தது. இதைப் பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரயில் முன்பாக சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி மோகத்தால் அடிக்கடி காங்கேயத்தான் அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரயில் வரும் போது, செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். தற்போது, ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற போது, காங்கேயத்தான் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரியும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.