2030க்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைய வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊரக உள்ளாட்சித்துறை உத்தரவு

நெல்லை: உலக தண்ணீர் தினமான வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் நிலையில், வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைந்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை வலியுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி இக்கூட்டத்தை நடத்துவதோடு, இக்கூட்டம் நடக்கும் இடத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

இக்கிராம சபை கூட்டத்தில் விலை மதிப்பிலாத பொருளான தண்ணீரை பேணி பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்திட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை உலக தண்ணீர் தினத்திற்காக இவ்வாண்டு, ‘தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ என்னும் கருப்பொருளை உருவாக்கியுள்ளது. அதன்படி வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும். இந்த இலக்குகளை அடைய தனிமனிதனாக, குடும்பமாக, சமூகமாக இணைந்து செயலாற்றிட பொதுமக்களை வலியுறுத்த வேண்டும்.

கிராம சபை கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சீரமைத்தல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர் மாசுப்பாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட காரணிகள் குறித்து விளக்கி கூற வேண்டும். சுத்தமான குடிநீர் வினியோகத்தினை பொதுமக்களுக்கு உறுதி செய்வதோடு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்திட வேண்டும்.

தினமும் தகுந்த அளவு குளோரின் கலந்த குடிநீர் வினியோகத்தினை உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல், அனைத்து வீடுகளிலும் திடக்கழிவுகள் தரம் பிரிப்பு,

அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கழிவறை பயன்பாடு, பொது இடங்களில் எச்சில் துப்புதலை தவிர்த்தல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்திட வேண்டும். அத்தகைய ஊராட்சிகள் ‘வீடுகள் தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி’ என தீர்மானங்களை நிறைவேற்றி கொள்ளலாம் என  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.