மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோவிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோயில் அமைதியான பரந்த சூழலில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவில் அழகர் கோவில் என்றும், இந்த மலை சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்ட கள்ளழகர் திருக்கோவில் மாதாந்திர உண்டியல் திறப்பு இன்று திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் திருக்கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்துக்கொண்ட நிலையில், திறக்கப்பட்ட உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து ரூபாய் 56 இலட்சத்து 10 ஆயிரத்து 139. மற்றும் 101 கிராம் தங்கம், 390 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்களிடம் இருந்து உண்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற காணிக்கைகளை திருக்கோவில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டது.