சென்னை, மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயல் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் மதுரவாயல், ஓம் சக்தி நகர்ப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிடிபட்டவர்கள் மதுரவாயல், அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21), திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் (19) என்பது தெரியவந்தது.
இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் ஒன்றாகச் சேர்ந்து பானி பூரி விற்பனை செய்துவரும் இருவரும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட முடிவுசெய்திருக்கின்றனர். இதையடுத்து, அபூபக்கர் சித்திக்கின் உதவியுடன் திரிபுரா மாநிலத்திலிருந்து கஞ்சாவை எடுத்து வந்து பானி பூரி விற்பதுபோல், தள்ளுவண்டியில் மறைத்துவைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், எடை மெஷின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். போலீஸார் பல்வேறு சோதனைகள் நடத்தி, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடித்துவரும் நிலையில், போலீஸாருக்குச் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பானி பூரி தொழில் நடத்திக்கொண்டே, கஞ்சா சப்ளை செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட இருவரும் விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.