சேலம்: சேலம் மாநகர பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, புதிய செயலியை காவல் ஆணையர் விஜயகுமாரி அறிமுகம் செய்து வைத்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக சேலம் மாநகர காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பயன்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அறிமுகப்படுத்தினார். சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் நலனை பேணி காக்கவும், தனியார் கல்லூரியுடன் இணைந்து, சேலம் மாநகர காவல் துறை சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் பயன்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேற்று தொடங்கி வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில், சேலத்தில் தங்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் எந்த முகவரியில் வசித்து வந்தவர்கள், தற்போது சேலத்தில் எந்த முகவரியில் வசித்து, பணியாற்றி வருகிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கூறும் போது, ”சேலத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக உள்ளார்களா, இல்லையா, என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வசதியானது, இந்த புதிய செயலியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இந்தச் செயலி மூலமாக பதிவு செய்து உதவியை பெறலாம். இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான உதவியும், நலனும் பேணி காத்திட புதிய செயலி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது,”என்றார்.