போபால் விஷ வாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்| No additional compensation in Bhopal gas leak case: Supreme Court

புதுடில்லி, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக, 7,844 கோடி ரூபாய் வழங்கக்கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த, ‘யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்’ என்ற ரசாயன தொழிற்சாலையில், 1984 டிச., 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் விஷ வாயு கசிந்தது.

கணக்கெடுப்பு

இதில், 3,000 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்த முடியாத பல நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு, 715 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது என, யூனியன் கார்பைடு நிறுவனம் முடிவு செய்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், ‘விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்தவில்லை.

‘எனவே, இழப்பீடாக கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு, 2010ல், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை ஏற்க அந்த நிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி சஞ்சய் கிஷண் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, அபய் எஸ் ஓகா, விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான காப்பீடும் செய்யப்படவில்லை.

இதற்கான பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் அரசு தரப்பு அலட்சியம் காட்டி உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை.

இதற்கான பொறுப்பை, யூனியன் கார்பைடு நிறுவனத்தை தற்போது இயக்கி வரும் நிறுவனமான, ‘டாவ் கெமிக்கல்ஸ்’ மீது சுமத்துவதை ஏற்க முடியாது. இழப்பீடு தொகை, 50 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியில் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது; அரசு இதை பயன்படுத்தலாம்.

ஏற்கனவே முடிந்த ஒரு வழக்கை, 20 ஆண்டு களுக்குப் பின் மீண்டும் விசாரிக்க கோருவது ஏற்புடையது அல்ல.

ஏற்கனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டபோது, கூடுதல் இழப்பீடு தேவைப்படுவதாக அரசு தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துஉள்ளது.

இந்த விவகாரத்தில் மோசடி ஏதாவது நடந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விசாரிக்கப்படும்.

ஆனால், அதுபோன்ற எந்த ஒரு கோரிக்கையையும் மத்திய அரசு வைக்கவில்லை. எனவே, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.